காதல்
இது கண்களால் விற்கப்படும்
கஞ்சாத்தூள்
காதல்-
ஒரு பக்கம் பூக்கள்
மறுபக்கம் முட்கள்
விதி கட்டி வைத்துள்ள
விசித்திர மாலை
தேனொரு பக்கம்
விஷமொரு பக்கம்
சேர்ந்து வழிகிற
செந்தாமரை
சாமிகளையே பம்பரமாய்
ஆட்டிப்படைத்த சாட்டை
வேண்டாமென்று
வெளியில் சொன்னாலும்
மறைவாய் மனிதன்
விரும்பி அருந்தும் மது
இளைய உள்ளங்களோடு
போராடவே
மனம்தனின் பாசறையில்
அமுதக்கட்டியில் தயாரிக்கப்பட்ட
ஆயுதம்
கணக்கில்லா மனிதரின்
கண்ணீர் லேகியத்தை குடித்து
சாகாவரம் பெற்றுவிட்டது
கண்களுக்கும் காதலுக்கும்
ஒரே வயது
யாராவது
கங்கையை வேரோடு பிடுங்கி எறியும்
நாளில்...
எந்த விஞ்ஞானியாவது
பூமி கிண்ணத்திலிருந்து
காற்றை சுத்தமாக
கழுவி ஊற்றிவிடும்
நாளில்...
மனிதனை விட்டு காதல்
மரித்துப்போகும்